பரமக்குடி:

பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக “ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு ரதயாத்திரை நடத்தி வருகிறது. இந்த யாத்திரையை தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்று பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்த யாத்திரயை எதிர்த்து, செங்கோட்டையில்  போராட்டத்தில் திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. இதற்கிடையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.   ரதயாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்திய ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் ஆங்காங்கே போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரத யாத்திரை எங்கும் நிற்காமல் வேகமாக செல்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தள்ளுமுள்ளு இந்நிலையில் பரமக்குடிக்கு யாத்திரை சென்றது.

அங்கு பல்வேறு இடங்களில் தமுமுக, விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.