சென்னை: நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் சென்னை வளர்ச்சிக்கு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இன்றைய பட்ஜெட்டில் மாநில தலைநகர் சென்னையில் வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிதி அமைச்சர், செஸ் ஒலிம்பியா, தாரவியல் பூங்கா, பறக்கும் சாலை, இசிஆர் 6வழி சாலையாக மாற்றம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை அசத்தலாக வெளியிட்டு உள்ளார்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு  செய்யப்படுவதாக நிதி அமைச்சர்  அறிவித்தார்.

தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டம்” தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

முதன்முறையாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வும் கூறினார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும். இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறு அவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த உயர்மட்ட  சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நான்கு வழி சாலையாக உள்ள சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதற்கு 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்

சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங் களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.