சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தொழிற்துறை மானிய கோரிக்கையின்மீது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவ தொழில்பூங்கா, சிப்காட், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிதி உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான தொழிற்துறை (சுரங்கங்கள் – கனிமங்கள்), தமிழ்வளர்ச்சித்துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இன்றைய விவாதத்தைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி,
காஞ்சிபுரம் அருகே ஓரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் தோல் பொருள் தொழில்பூங்கா ஏற்படுத்தப்படும்
நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைக்கலன் பூங்கா 100 ஏக்கரில் உருவாக்கப்படும்
விருதுநகரில் ரூ.400 கோடி மதிப்பில் ஆடைப் பூங்கா,
திருவள்ளூரில் ரூ.250 கோடியில் சிப்காட் அமைக்கப்படும்.
மழைக்கால தொழில்பாதிப்பு நிதியுதவியாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ரூ.5.9 கோடி மதிப்பில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும்
உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.