ஆயிரம் ரூபாய்க்காக மொட்டை போட்டு ‘’நேபாளி’’ வேஷம் போட்ட இளைஞன்..
’அயோத்தி எங்களுக்குச் சொந்தம் ‘’ என்று நேபாள பிரதமர் சர்மா ஒளி, உரிமை கொண்டாடி இருந்தார்.
இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசியில் வசிக்கும் நேபாள இளைஞனை, இந்து அமைப்பினர் மொட்டை போட்டு, ‘ஒளிக்கு எதிராக கோஷம் போட வைத்ததாக வீடியோ காட்சியுடன் செய்தி பரவியது.
’’நேபாள’’ இளைஞன் மொட்டைத்தலையுடன் ’’ஜெய் ஸ்ரீராம் ‘’ என முழங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால் அந்த இளைஞன் ’நேபாளி அல்ல .. இந்தியர் ‘’என்ற உண்மை இப்போது வெளியாகியுள்ளது.
அவர் பெயர்- தர்மேந்திர சிங். வாரனாசியில் பிறந்து வளர்ந்தவர். ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கைதாகியுள்ள இருவர் , தர்மேந்திர சிங்கிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து மொட்டை போடச்செய்துள்ளனர்.
ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவரும் மொட்டை போட்டு ‘’நாடகம் ‘’ ஆடி இருப்பது தெரிய வந்துள்ளது.
வாரனாசி போலீசில் ஆஜராகிய தர்மேந்திர சிங்’’ ஒரு நிகழ்ச்சிக்காக என்னை மொட்டை போடுமாறு சிலர் என்னிடம் கூறி ஆயிரம் ரூபாய் தந்தனர். பின்னர் அதை வீடியோ எடுத்தனர். அவர்கள் எனக்கு முன்பே தெரிந்தவர்கள் என்பதால் காசு வாங்கிக் கொண்டு மொட்டை போட்டேன் ‘’என வாக்குமூலம் அளித்துள்ளார், வாரனாசி இளைஞர்.
-பா.பாரதி.