வாரணாசி: ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தொடரப்பட்ட வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட வீடியோ ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சீல் வைக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது. அதேசமயம், இது தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அந்த உத்தரவானது நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய தொல்லியல் துறை, அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.