அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர் மாவட்டம், நல்லாத்தூரில் அமைந்துள்ளது.
“காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன்” என்று சொல்லி அமர்ந்தார் வரதாஜப் பெருமான். தான் வருவதற்கு முன்னரே தனது அம்ச மூர்த்தியைப் பல்வேறு தலங்களில் நிலைநிறுத்திக் கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்தது. அவற்றில் ஒன்றாக நல்லாத்தூரிலும் ஆட்சி கொண்டார். இராவணனை வீழ்த்திய பின் பாரத தேசத்தின் அனைத்து மக்களையும் காண்பதற்காக, சிறு கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை சீதாப்பிராட்டியோடு இராமர் திருவலம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தார். மக்கள் அனைவரும் இராமநாமம் சொல்லி அவரை வரவேற்றனர். “தங்களின் திருப்பாதங்களைப் பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதைப் பூஜித்து ஆனந்தமடைவோம்” என அன்புடன் கேட்டுக் கொண்டனர். இராமரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றார்.
இங்குள்ள ஆதிலட்சுமி நாராயண பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்தமண்டபத்தில் திரிபங்கி இராமரும், அவருக்கு அருகே இடது கையில் இராமரின் சூரியவம்சக் கொடியை ஏந்தியும், இருக்கிறார். வலது கையால் வாய் மூடிப் பணிவாக இருக்கிறார் விநய ஆஞ்சநேயர். அருகில் திருமங்கை ஆழ்வாரும், வேதாந்த தேசிகரும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இங்கு பெருந்தேவி தாயாரும், கஜலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி உள்ளது.
உடலில் எட்டு நாகங்களோடு கருடாழ்வார் காட்சி தருகிறார். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்து, 8முறை பிரதட்சணம் செய்தால் சிறந்த கல்வியும், செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் சீதா கல்யாணத்தின் போது, இக்கோயிலுக்கு வந்து இராமர்–சீதை காப்புக்கயிறு கட்டிச் செல்பவர்களுக்கு உடனே திருமண பாக்கியம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திய இந்தக் கோயில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு அருகே சிங்கிரி இலட்சுமி நரசிம்மர் கோயிலும், மேற்கில் பூவரசன்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயிலும் அமைந்துள்ளன.
திருமண பாக்கியம் கிடைக்க பெருமாளையும், கல்வியில் சிறந்து விளங்க கருடாழ்வாரையும் வேண்டிக் கொள்கின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றியும், கருடாழ்வாருக்கு 8 முறை பிரதட்சணம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.