இருளர் பழங்குடியினத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மாற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர்.
இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்” என கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.