சென்னை: அதிமுக கூட்டணியில் தொடரும் பாமக, சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் , வன்னியர்களுக்கு 20 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும்3 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், 20% இடஒதுக்கீடு அளித்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைவோம் என்று பாமக தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, அதிமுக அமைச்சர்கள் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். பாமக தரப்பில், கே. மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சமூக முடிவு எட்டப்பட வில்லை என்பது ராமதாஸ் வெளியிட்டடிவிட் மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் பழனிசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும், அப்போது, வன்னியர்களுக்கான 20% உள்ஒதுக்கீடு, கூட்டணி தொடர்பாக முதலமைச்சருடன் ராமதாஸ் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.