திருப்பத்தூர்: எடப்பாடிக்கு ஆதரவாக வாணியம்பாடி அதிமுக மாவட்ட செயற்குழு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு வரும் 23ந்தேதி கூட உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமாகி உள்ள நிலையில், எடப்பாடி, ஓபிஎஸ் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பு வலியுறுத்தி வருகிறது. பொதுக்குழுவில் பங்கேற்க தகுதி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதால், ஓபிஎஸ் அணி செய்வதறியாது திகைத்து வருகிறது. இதையடுத்து, பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். மேலும், வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன. ஆனால், திட்டமிட்டபடி பொதுக்குழு கூடும் என எடப்பாடி தரப்பு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில், அவசர செயற்குழு கூட்டம் கூடியது. இதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என அவசர மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுகவை பிளவுபடுத்த நினைத்து பின்னிருந்து திமுக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியவர், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் மன்னார்குடி குடும்பம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.