அத்தியாயம்: 8
புலவர் ஒருவர் அரசனைப்பார்த்து, ‘அறிவில்லாதவனே’ என்றார்.
அரசன் மகிழ்ந்தான், அவருக்குப் பரிசுகளைத் தந்தான்.
மற்ற புலவர்கள் குழம்பிப்போனார்கள். ‘அரசே, உங்களை அறிவற்றவர் என்று அவர் சொல்கிறார், ஆனால் நீங்கள் அவருக்குப் பரிசு தருகிறீர்களே’ என்றார்.
%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d
அரசன் சிரித்தான், ‘அவர் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, அறிவில்லாதவன் என்பதை அறிவு இல்லாதவன் என்று பிரிக்கக்கூடாது, அறிவில் ஆதவன் என்று பிரிக்கவேண்டும், சூரியன்போல் எல்லாத் திசைகளிலும் பரந்து விரிந்த அறிவுள்ளவன் என்று அவர் என்னைப் பாராட்டுகிறார்.’
இப்படி ஒரு சொல்லைப் பலவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்ளும் சாத்தியம் தமிழின் இனிமைகளில் ஒன்று. இதைவைத்துப் புலவர்களும் அறிஞர்களும் ஏராளமான சொல்விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
உதாரணமாக, கிவாஜ அவர்களின் சிலேடைகள் மிகப் புகழ்பெற்றவை. அவர் எழுதிய ‘சிரிக்கவைக்கிறார் கிவாஜ’ என்ற நூல் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது, தேடிப்பிடித்து வாசியுங்கள், மகிழ்ந்து அனுபவிப்பீர்கள்.
கொஞ்சம் யோசித்தால் நாம் தினமும் பயன்படுத்தும் சொற்களைக்கொண்டு இதுபோன்ற சொல்விளையாட்டு களை நாமே உருவாக்கலாம். சொற்களைச் சும்மா பலவிதமாக உருட்டிக்கொண்டேயிருந்தால் போதும்.
உதாரணமாக, ஒட்டகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். காதல் தோல்வியடைந்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் ஒருவனுடைய இதயத்தை ‘ஒட்டகம்’ என்று அழைக்கலாம். அதாவது, ஒட்டுஅகம், காதல் தோல்வியால் கிழிந்து, ஒட்டுப்போட்ட அகம்.
தமிழ்ச்சொற்களைப் பிறமொழிச்சொற்களைப்போல் அமைத்து விளையாடுவதும் உண்டு. உதாரணமாக, அதே ஒட்டகத்தை ‘ஒட்ட Gum’ என்று பிரித்து ஒரு நகைச்சுவைத் துணுக்கு இருக்கிறது. ‘அந்தத் தபால் அதிகாரிகிட்டே ஒட்ட Gum கேட்டேன், பாலைவனத்துக்குப்போங்கன்னு ஜோக்கடிக்கறார்!’
இவற்றைச் சிலர் மொக்கை என்பார்கள். சிலர் கிடைத்த வாய்ப்பிலெல்லாம் விளையாடி மகிழ்வார்கள். அவரவர்க்கு அதது!
(தொடரும்)