டெல்லி: வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றானது டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தளர்வுகள் இருந்தாலும், போக்குவரத்து சேவைகள் துவக்கப்படவில்லை.
ஆகையால் வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்கள் நாடு திரும்ப முடிய வில்லை. அவர்களை மீட்டு தாயகத்துக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தது. அந்த திட்டத்தின் கீழ் ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று துபாயில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த வந்தே பாரத் திட்டம் தொடருமா என்று கேள்வி எழுந்தது.
இந் நிலையில் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடரும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது.