டில்லி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையின் போது பிடிபட்ட பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. அது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் வரும் 23 ஆம் தேதி அதாவது வியாழன் அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் இருந்த போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாடெங்கும் பல இடங்களில் சோதனை நடத்தி ரொக்கம், மது, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இவை வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக அளிக்க அரசியல் கட்சியினர் வைத்திருந்தது என கூறப்படுகிறது.
நேற்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் ஆனையம் இந்த பொருட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 10ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை ரூ.893 கோடி ரொக்கம், ரூ.294.41 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.1270.37 கோடி மதிப்புள்ள போதைமருந்துகள், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் ரூ.986.76 கோடி, வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களாக இருந்த புடவை, கைக்கடிகாரம், உள்ளிட்ட பல பொருட்களின் மதிப்பு ரூ.58.86 கோடி என மொத்தம் சுமார் ரூ. 3.449 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையர் திலீப் சர்மா தெரிவித்தார்.
இதற்கு முன்பு நடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலின் போது மொத்தமாக ரூ.1200 கோடி மதிப்பில் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தர்போது அதைப் போல் 3 மடங்கு பொருட்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]