வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை எம்.எல்.ஏ., வின் கணவர் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்து. இந்த கூட்டத்தில், துணை கலெக்டர் ஆர். வைத்தியநாதன், டி.எஸ்.பி. என். விவேகானந்தன், தாசில்தார் ராஜா, நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் உள்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுமட்டுமின்றி அதிமுக கட்சியை சேர்ந்த ஹமீத் மற்றும் மயில் கனேஷன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வால்பாறை, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கஸ்துாரியின் கணவரான, ஓய்வு பெற்ற, வி.ஏ.ஓ., வாசன் அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்களை கேட்டறிந்து கொண்ட வாசன், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பெரும்பாலன உத்தரவை பிறப்பித்துள்ளார். எந்த பதவியிலும் இல்லாத இவர், அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வால்பாறை திமுக செயலாளர் பால்பாண்டி தெரிவிக்கையில், நாங்களும் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றோம். எம்.எல்.ஏ.. வின் கணவர், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க என்ன உரிமை உள்ளது. இந்த ஆய்வு கூட்டம் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டதா என்பதே எங்களுக்கு தெரியவில்லை. ஊரடங்கு முடிந்த பின்னர் இந்த பிரச்சினையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார். இந்த ஆய்வு கூட்டம் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தாங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து சப்-கலெக்டர் தெரிவிக்கையில், நான் அந்த கூட்டம் நடந்ததாக சொல்லப்படும் இடத்திற்கு சென்று, அங்கு எம்.எல்.ஏ.வின் கணவரை சந்தித்தேன். ஆனாலும், அங்கு ஆய்வு கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்றார். இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள தாசில்ந்தார் ராஜா தெரிவிக்கையில், எம்.எல்.ஏ.வின் கணவர் தன்னை சந்தித்து, உணவு வினியோகம் செய்ய அனுமதி கோரினார் என்று கூறினார்.
இதுகுறித்து வால்பாறை எம்.எல்.ஏ.. கஸ்தூரி தெரிவிக்கையில், தனது கணவர் சில அலுவல் காரணமாகவே அங்கு சென்றிருந்தார் என்றும், அவர் ஆய்வு கூட்டம் எதையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், மூத்த வருவாய் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஆய்வு கூட்டம் நடந்தது உண்மைதான் என்றும், இனிமேல் இதுபோன்ற கூட்டம் நடத்தினால் போக கூடாது என்று சப்-கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.