சென்னை: வள்ளலார் மும்பெரும் விழா, சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
முன்னதாக இன்று காலை பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இன்றைய அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்துசமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி,
தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு ரூ.1கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு, 3 நாட்கள் அரசு விழா நடத்தப்படும்.
52 வாரங்களுக்கு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும்.
மயிலாப்பூர், நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை கோவில்களில் மகாசிவராத்திரியன்று மாபெரும் விழா நடத்தப்படும்.
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டணச்சீட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும்.
ஒருகால பூஜை திட்டத்தில் நிதிவசதியற்ற மேலும் 2ஆயிரம் கோயில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுபடுத்தப்படும்.
27திருக்கோவில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் கட்டப்படும்.
கோவிலில் திருமணம் செய்பவர்களில் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களுக்கு கோவில் சார்பில் புத்தாடை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.