சென்னை: வளர்ச்சிப் பாதையில் வடசென்னை திட்டத்தின்கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 29 முடிவற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பேரிடர் காலங்களில் பலர் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். “மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி, ஆதாயம் தேடலாம் என பலர் மலிவான அரசியிலில் ஈடுபட்டு வருகின்றனர்” என விமர்சித்தார்.
வடசென்னையில் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடி மதிப்பிலான 79 புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக ரூ.2097 கோடி மதிப்பீட்டில் 87 திட்டங்கள் மார்ச் 14-ல் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 29 முடிவுற்ற திட்டப் பணிகளையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று இரண்டாம் கட்டமாக 79 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படவில்லை. ஆனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். விரைவில் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவோம்.
கடந்த காலங்களில் சென்னையை மீட்டெடுத்தது போல மற்ற மாவட்டங்களையும் மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும். மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி, ஆதாயம் தேடலாம் என பலர் மலிவான அரசியிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை செயற்கை வெள்ளத்தில் மிதந்தது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.
அதற்கு ஃபெஞ்சல்தான் சாட்சி. திமுகவின் நடவடிக்கைகளால் அடுத்த நாளே சென்னை புயலில் இருந்து மீண்டுள்ளது. விடியலை தருவதுதான் உதயசூரியன். உங்களின் பணிகள் வரலாற்றில் சிறப்பான இடத்தை பெறும் என மக்கள் பாராட்டுகின்றனர். புகார் கொடுப்பவர்கள், விமர்சனம் செய்பவர்கள், ஓட்டு போட்டவர்கள், ஓட்டு போடாதவர்கள் என அனைவருக்கும் நன்மையை செய்வோம்.
இந்த பாராட்டுகள்தான் எதிர்க்கட்சியை வயிறெறிய வைத்துள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் களத்தில் உள்ளனர். நிவாரண உதவிகளை செய்கின்றனர். நம்மால் அரசியல் செய்ய முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தவிக்கின்றனர். மக்களின் மனதுதான் எங்களுக்கு முக்கியம். பொதுமக்களின் குறைகளை, விமர்சனங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதனை தீர்க்க செயல்படுகிறோம். நமது அரசில் மக்களின் குரல் கேட்கப்படுகிறது. அவர்களின் தேவைகளை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
அதனால்தான் பெருமழையின் மறுநாளே வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்கு நாம் இங்கு வந்துள்ளோம். இதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் வடசென்னை வரும்போது இந்த பகுதிக்கு பல திட்டங்களை செய்ய வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான அறிவிப்புதான் கடந்த மார்ச் 14-ல் துவங்கப்பட்ட ரூ.2097 கோடி மதிப்பீட்டிலான 87 திட்டங்கள்.
அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் இன்று 29 திட்டங்கள் முடிவுற்று திறக்கப்பட்டுள்ளன. இன்று ரூ.1,383 கோடி மதிப்பிலான 79 புதிய திட்டப்பணிகளை துவங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். வள்ளலார் சென்னையை தர்மமிகு சென்னை எனக்கூறுவார். இங்கு வந்தால் நம் குடும்பம் முன்னேறும் என்று வந்தவர்களை சென்னை என்றும் கைவிட்டதில்லை. அப்படிப்பட்ட சென்னையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான் பொறுப்பேற்று, சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கினேன்.
இன்று முதலமைச்சராக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு வந்துள்ளேன். சென்னை இந்தளவு வளர்ச்சி அடைந்ததற்கு நீங்கள்தான் காரணம் என வெளிநாட்டு தூதுவர்கள் கூறுவர். அந்த மனநிறைவோடு இன்னும் சென்னைக்கு செய்ய வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றும். ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னை என்றாலே வடசென்னைதான். சென்னைக்கு மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக நான் செய்ததைவிட, முதலமைச்சராக நிறைய செய்ய வேண்டும் என எனக்கு பொறுப்புகள் கூடியுள்ளது.
வடசென்னைக்கு மட்டும் ரூ.6309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளோம். பாதுகாக்கப்பட்ட குடிநீர், சீராக கழிவுநீர் செல்வதற்கான அமைப்புகள், போதிய மருத்துவ வசதி, தொழிற்கல்வி திறன்பாடு பகிர்ந்த பணியிடம், நூலகங்களின் தரத்தை உயர்த்துதல், கல்வி மையம், பள்ளிக்கூட கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், சீரான சாலைகள், பூங்காக்கள், மின் நிலைய வசதிகள் போன்ற திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
சென்னை மக்களின் தேவைகளை உணர்ந்து பார்த்து, பார்த்து திட்டங்களை ஒதுக்கியுள்ளோம். நம் தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார் அண்ணா. மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என கருணாநிதி மாற்றினார். அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், பாடி பாலம், மீனம்பாக்கம் பாலம், மூலக்கடை பாலம், மேற்கு அண்ணாநகர் பாலம், வியாசர்பாடி பாலம், சர்தார் பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை மேம்பாலம், டிடிகே சாலை, ஆர்கே சாலை மேம்பாலம், பாண்டியன் சாலை மேம்பாலம், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் என இதுபோன்று இன்னும் நிறைய இருக்கு.
ஏராளமான பூங்காக்கள், கோயம்பேடு காய்கறி அங்காடி, கோயம்பேடு பேருந்து நிலையம், ஓமந்தூரார் மருத்துவமனை கட்டிடம், கிண்டி அரசு மருத்துவமனை, டைடல் பார்க் என பெரிய பட்டியலை போடலாம். இதனால்தான் சென்னை திமுகவின் கோட்டையாக உள்ளது. சிங்கார சென்னையை கட்டியெழுப்புவோம்” என தெரிவித்தார்.