அமெரிக்கா மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக எழுதியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
தற்போது வைரமுத்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார்.
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
என் காற்றின் கழுத்தில் – யார்
கால்வைத்து அழுத்துவது?
சுவாசக் குழாயில் – யார்
சுவர் ஒன்றை எழுப்பியது?
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?
எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?
ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?
தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?
காக்கையும் உயிரினம்
கருமையும் ஒரு நிறம்
எல்லா மனிதரும் ஒரே தரம்
எண்ணிப்பாரு ஒரு தரம்
மாளிகை நிறத்தை மாற்றுங்கள் – ஒரு
பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்
நீங்கள் பகல் நாங்கள் இரவு
இரண்டும் இல்லையேல் காலமே இல்லை
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை!