திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பாதையில் திருக்குவளையில் இருந்து 5.கி.மீ. தொலைவில் வாய்மூர்நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம். விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் கமலநடனம். கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் வேதாரண்யேஸ்வரர் சன்னதியும் அம்பாள் சன்னதியும் காணப்படுகின்றன.
சூரியன் பூசித்துப் பேறு பெற்ற தலம். சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் திருமறைக் காட்டில் எழுந்தருளியிருந்த பொழுது வாய்மூர் இறைவர் அப்பர் கனவில் தோன்றி “நாம் வாய்மூரில் இருப்போம் வா” என்றனர்.
உடனே அப்பர் விரைவில் எழுந்து இறைவரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில் சென்றதும் இறைவர் மறைந்துவிட்டனர். இதற்குள் ஞானசம்பந்தரும் அங்கு எழுந்தருள, அப்பர், “கதவைத் திறக்கப்பாடிய நானும் , செந்தமிழ் உறைக்கப் பாடி அதை அடைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளி யுள்ளார்.
அவர்க்குக் காட்சியை அளிக்கவாவது வெளிப்பட்டருள வெண்டும்” என்றுபாட அவ்வாறே வாய்மூர் இறைவர் காட்சி தந்தருளினார். முசுகுந்த சக்கரவர்த்தி கட்டிய திருக்கோயில்.