திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் என அறிவித்துள்ள தேவஸ்தான, 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் மேற்கொள்ளும் வகையில், 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வைகுண்ட ஏகாதசி துவாரகா தரிசனம் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவின் போது அதிக அளவிலான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல முக்கிய மற்றும் சிறப்பு சேவைகள், தரிசனங்களை ஏற்கனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் போது ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் பக்கிங் தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான தரிசன டிக்கெட் புக்கிங் தேதி குறித்த அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான இஓ ஷ்யாமளா ராவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது
. வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது.
காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார்.
துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.