திருப்பதி

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இரு தினங்கள் மட்டுமே வைகுண்ட வாசல் தரிசனம் நடைபெறும் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறப்பு நடப்பது வழக்கமாகும். அப்போது அந்த வாசலைத் தரிசித்து அதன் வழியே செல்வோருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் என ஒரு ஐதீகம் உண்டு.   இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் அந்த தினத்தன்று கூட்டம் அதிகமாக காணப்படும்.

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் அடுத்த நாள் துவாதசி ஆகிய இரு தினங்களில் வைகுண்ட வாசல் தரிசனம் நடைபெறும்.   இந்த நாட்களில் லட்சக்கணக்கானோர் ஆலயத்துக்கு வருவதால் கடும் நெரிசல் காணப்படும்.   இதையொட்டி தேவஸ்தான ஆலோசனைக் குழுவினர் இந்த வருடம் வைகுண்ட வாசல் தரிசனத்தை 10 நாட்கள் நடத்த எண்ணினர்.

நேற்று விசாகா சாரதா பீடாதிபதியான சொரூபானந்தா சாமி திருப்பதி கோவிலுக்கு வந்தார்.  அவரிடம் இது குறித்து ஆலோசனை கேட்கப்பட்டது.   அவர், “திருப்பதி கோவில் ஆகம முறைப்படி பூஜை நடக்கும் தலமாகும்.  எனவே அதை மாற்றி 10 நாட்கள் வைகுண்ட வாசல் திறக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானம்  அவருடைய அறிவுரைப்படி வைகுண்ட வாசலை 10 நாட்கள் திறந்து வைக்கலாம் என்னும் யோசனையை நிராகரித்துள்ளது.   மேலும் வரும் 6 மற்றும் 7 தேதிகளில் அதாவது வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி தினங்களில் மட்டும் வைகுண்ட வாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.