சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்ட இன்று அதிகாலை ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி உள்பட வைணவ ஸ்தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்தை லட்சகணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள்…
தமிழ் மாதங்களிலேயே சிறந்ததாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையில் துயிலெழுந்து குளித்துவிட்டுத் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவது வழக்கம்.
மார்கழி மாத்தின் சிறப்பான வைகுண்ட ஏகாதசி நாளன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். இதையொட்டித் தமிழகத்தில் புகழ்பெற்ற அனைத்து வைணவத் தலங்களிலும் திருப்பதியிலும் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக நேற்று முதலே கோவில்களில் திரண்டனர்.
திருப்பதி கோவிலில் நேற்றுக் காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பையடுத்துப் பக்தர்கள் இறைவனை வழிபட்டனர்.
108 வைணவத் தலங்களிலேயே முதன்மையானதாகக் கருதப்படும் திருவரங்கத்தில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் அங்குக் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசைக்கருவிகளை மீட்டியும், கோவிந்தா, அரங்கநாதா என முழக்கமிட்டும் வழிபட்டனர்.
இதேபோலச் சென்னைத் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலிலும் அதிகாலையில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலிலும், கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும், மதுரை சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்பட்டு எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாடு முழுவதும் உள்ள வைணவ ஸ்தலங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.