கொழும்பு:
தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்று, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், தற்போதைய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள், தங்களது சுயநல அரசியல் தேவைகளுக்காக ஈழ மக்களை பகடைகாயாக பயன்படுத்துவது மூன்றாம் தர அரசியல் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில், ராஜபக்சேவின் உறவினர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றுள்ளார். அப்போது பேசிய கோத்தபய, தமிழ்மக்கள் எனக்கு வாக்களிக்க வில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகஅரசியல் கட்சிகள், கோத்பய தேர்வானது குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், பிரதமர் மோடி தலையிட்டு தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்சேவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யவில்லை. தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைக்களிற்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் மிகுந்த வேதனை தரும் உண்மை.
எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட, கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்களை பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் கண்ணுற்றேன், அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறெதுவும் இல்லை. எமது மக்களை பகடைக்காய் களாக்கும், எம்மக்களிடையே பகையையும், துவேசத்தையும் தூண்டி விடும் மூன்றாம் தர அரசியல் தவிர வேறு என்ன ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து, வடக்கு – கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சிநேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயம்.
அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன், எம்முடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன். எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது”
“எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும். நல்லெண்ணத்துடனும் செயற்படும்.எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும்.
தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு.. விட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.
ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு நமல் ராஜபக்சே கடுமையாக விமர்சித்து உள்ளார்.
\Vaiko, Ramadoss, Thirumavalavan and Nedumaran are opportunistic politicians! Rajapaksa son Namal rajapaksa accusation