அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனை மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வைகோ,” ரவிச்சந்திரனுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவரைப் பார்க்க மதுரை சிறைக்கு வந்ததேன்”என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “ இந்திய அரசியல் சட்டம் 161-ன் படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரையும் விடுவிக்க தமிழக அரசிற்கு முழு அதிகாரம் உள்ளது. அதைப்பயன்படுத்தி அவர்களை முதல்வர் ஜெயலலிதா விடுவிக்க வேண்டும். இது மாநில உரிமைகளை பயன்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமான நடிவடிக்கையாக இருக்கும்” என்றும் வைகோ கூறினார்.