யாரிடமும் எந்த சூழலிலும் கோபத்தை வெளிக்காட்டாதவர் என்ற பெயர் வைகோவுக்கு இருந்தது உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக, “தலைவர் ரொம்ப கோபப்படுகிறார்” என்று உரிமையுடன் தொண்டர்கள் முணுமுணுக்கும் நிலை.
சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்தும் பேசினாராம் வைகோ.
அது குறித்து நம்மிடம் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது:
“தலைவர் (வைகோ) எத்தனை அன்பான மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சிக்காரர்கள் என்றல்ல.. கட்சி கடந்தும் பலருக்கு அவர் அன்போடு உதவியிருக்கிறார். தன்னை நாடி வருபவர்களிடம் அக்கறையுடன் பேசுவார்.
இன்றளவும் அவரது அந்த குணம் மாறவில்லை. மாறவும் மாறாது. ஆனால், கடந்த சில வருடங்களாக அவ்வப்போது கோபப்படுகிறார். இதுவும் அனைவரும் அறிந்ததுதான்.
சமீபத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பல விசயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், அன்றாடம் எந்த அளவுக்கு உழைக்கிறேன் என்பதைச் சொன்னார். அது எங்களுக்குத் தெரியும் என்றாலும், உதாரணத்துக்கு முரசொலி பவளவிழா நடந்த அன்று அவரது நிகழ்ச்சிகளை சொல்லச் சொல்ல சொல்ல இன்னும் பிரமிப்பாக இருந்தது.
“முரசொலி பவள விழாவில் பேசிவி்ட்டு நமது கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டலில் சாப்பிட்டோம்… அங்கிருந்து கார்லேயே புறப்பட்டு விடியற்காலை தேனி சென்று ஒரு நிகழ்வு.. அங்கிருந்து பிறகு கல்லுப்பட்டி சென்றேன்.. ஒரு துக்க நிகழ்வு.. பிறகு அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.. பிறகு ஒன்றிய செயலாளர் மனைவி மரணம் அங்கு சென்று துக்கம் கேட்டுவிட்டு… பிறகு தஞ்சை வந்தேன்.. மாநாட்டு திடலை பார்த்து சில ஆலோசனைகளைச் சொல்லிவிட்டு அங்கிருந்து மன்னார்குடி சென்று திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டேன்.. அங்கிருந்து . பொன்னமராவதி சென்றேன்.. அங்கு…” இப்படி வைகோ சொல்லச் சொல்ல பிரமிப்பாகிவிட்டது எங்களுக்கு.
தொடர்ந்து பேசிய வைகோ, “இப்படி ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கிறேன். சொந்த விவகாரங்கள் ஏதும் இல்லை. இந்த சமுதாயத்துக்காகவும் நம் கட்சிக்காகவும்தான் உழைக்கிறேன். இதில் ஆயிரம் பிரச்சினைகள் மண்டையை போட்டு உடைக்குது. சோதனைகள்.. வேதனைகள்..! சில சமயங்களில் என் கண்ட்ரோலில் நான் இல்லை. அந்த நேரத்தில் ஆத்திரப்பட்டு விடுகிறேன். ஓய்வு இல்லாதது இதற்குக் காரணம்” என்று தான் ஆத்திரப்படுவதற்கான காரணத்தை வைகோ கூறியபோது கேட்டுக்கொண்டிருந்த பலரும் கண் கலங்கிவிட்டோம்.
மீண்டும் அவர், “அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை சாயந்திரம் எல்லா ஃபைலையும் மூடிருவான். எந்த ஃபைலையும் அதிபருக்கு அனுப்ப மாட்டான். திங்கள் கிழமை காலைதான் அனுப்புவான். அதிபருக்கு ரெண்டு நாள் கட்டாயமா ரெஸ்ட்தான். அவர் கொஞ்சம் கோவப்பட்டு பேசினால் உடனே ஒன் வீக் வெகேஷன் போய்ட்டு வாங்கன்னு அனுப்பிருவான். அது மாதிரி நாம இருக்க முடியுமா” என்று அவர் சிரித்து எங்களையும் சகஜ நிலைக்கு கொண்டு வர முயன்றார். ஆனாலும் நெகிழ்ச்சியான மன நிலையிலிருந்து மீள முடியவில்லை.
தான் கோபப்படுவதற்கான காரணத்தை தனது தொண்டர்களிடம் இத்தனை வெளிப்படையாக எந்தத் தலைவர் கூறுவார்” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் நம்மிடம் பேசிய அந்த நிர்வாகி.