சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுகவின் தொமுச அமைப்பைச் சேர்ந்த சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டணை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதால், அவர் ராஜ்யசபாவுக்கு செல்வாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும், அவர் ராஜ்யசபாவுக்கு போட்டியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல முன்னணி தலைவர்களின் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன், திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தொமுச சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்ட நிலையில், அதிமுக சார்பாக யார் வேட்பாளர்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் அன்புமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், திமுக மற்றும் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.