வைகோ

வேளாண்மைத் துறையை மத்திய அரசின்அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி நடப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

 

“இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் கடந்த மூன்றாண்டு கால நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்புதான் என்பதை மறுதலித்துவிட்டு ஒற்றை ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் “ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி” என்பதை நிலைநாட்டுவதற்கு மோடி தலைமையிலான அரசு, அரசியலமைப்புச் சட்டத்தையே புறந்தள்ளி வருகிறது.

 

‘மாநில உரிமைகளுக்கு முதன்மையான இடம் அளிப்போம்’ என்று நரேந்திர மோடி அள்ளி வீசிய வாக்குறுதிகள் காற்றோடு கலந்து விட்டன. மாநிலங்களை நகராட்சிகளை விட கீழாக நடத்தும் போக்குதான் இப்போது தொடருகிறது. மத்திய, மாநில உறவுகளில் நீடிக்கும் சிக்கல்கள் களையப்பட வேண்டும்; உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. அரசோ மாநில உரிமைகளையும், அதிகாரங்களையும் ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது. திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு அதற்கு மாறாக உருவாக்கப்பட்ட ‘நீதி ஆயோக்’ இந்தியாவை ஒற்றை ஆட்சிமுறைக்குக் கொண்டு செல்லவும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் ‘ஒரே நாடு’ எனும் கொள்கையை நிலைநாட்டவும் துணை போகின்றதோ எனும் ஐயப்பாடு எழுந்துள்ளது.

 

‘நீதி ஆயோக்’ அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள நேர்காணல் மேற்கண்ட ஐயத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

 

“மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து வேளாண்மைத் துறையை முழுமையாக மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஏனெனில் விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. எனவே, விவசாயத் துறையை மத்திய அரசின்கீழ் கொண்டு வர வேண்டும். விவசாயத் துறை வளர்ச்சியைப் பொருத்தவரையில் இனியும் மாநில விவகாரம் என்று கூற முடியாது. முக்கியமான விவசாய சீர்திருத்தங்களை ஓர் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்த மாநிலங்களை வலியுறுத்த வேண்டும் என்று ‘நீதி ஆயோக்’கிற்கு பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார். எனவே, வேளாண்மைத் துறையை மத்திய அரசு அதிகாரப் பட்டியலின்கீழ் கொண்டு வர வேண்டும். அதைப் போன்று உணவு பதப்படுத்துதல் துறையில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசின் முடிவாக இருக்கும்போது, இத்துறை மாநிலப் பட்டியலில் நீடிப்பது தேவையற்றது.”

இவ்வாறு ‘நீதி ஆயோக்’ உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆபத்தான கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

மாநிலங்கள் வேளாண்மைத் துறையில் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத மத்திய அரசு‘வேளாண் கடன் தள்ளுபடி என்பது மாநில அரசின் பொறுப்பு; அதற்கு மத்திய அரசு உதவ முடியாது’ என்று திட்டவட்டமாக கைவிரித்து விட்ட மோடி அரசு, வேளாண் துறையை மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து பறித்துச் செல்ல முயற்சிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.

பொதுப் பட்டியலின்கீழ் கல்வித்துறை மாற்றப்பட்டு விட்டதால் மாநிலங்களின் கல்வி உரிமைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதற்கு ‘நீட்’ ஒரு சான்றாகும். இந்நிலையில் வேளாண்மைத் துறை, உணவு பதப்படுத்துதல் துறை போன்றவற்றையும் மத்திய அரசு, மாநிலங்களின் பட்டியலில் இருந்து மத்திய அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு, மத்திய அரசின் இத்தகைய திட்டத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

வேளாண்மைத் துறையை மத்திய அரசின் பொறுப்பில் கொண்டு செல்லும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” – இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.