திருச்செந்தூர்: முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் மே 22, 2024 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது . திருச்செந்தூர், பழனி உள்பட பல முருகன் கோவில்களில், 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும்.

தமிழ் மாதங்களில் ஒன்றின் பெயர் ‘வைகாசி’ என்றும், ‘விசாகம்’ என்பது நக்ஷத்திரங்களில் ஒன்றின் பெயர். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.  மேலும், வைகாசி விசாகத்தன்றுதான்  முருகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. முருகப் பெருமானின் அவதார நோக்கமே தீமைகளை அழித்து, நன்மைகளை காக்க வேண்டும் என்பது தான். உலகம் முழுவதும் பல இடங்களிலும் முருகப் பெருமான் கோவில் கொண்டிருந்தாலும் திருச்செந்தூர் தலமே வைகாசி விசாகத்திற்குரிய தலமாக சொல்லப்படுகிறது. இது புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

சுட்டெரிக்கும்  கோடை காலத்தின் முடிவாகவும், வசந்த காலத்தில் துவக்கமாக கொண்டாடப்படுவதால் வைகாசி விசாகப் பெருவிழாவிற்கு வசந்த விழா என்றொரு பெயரும் உண்டு. முருகப் பெருமான் வாழ்வில் நம்மை வாட்டும் துன்பங்களை போக்கி, வசந்தத்தை தரும் கடவுள் என்பதால் வைகாசி விசாகம் முருகனுக்கே உரிய விழாவாயிற்று. இதை உண்மை என சொல்லுவது போல் திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருவிழாவின் போது முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

வைகாசி விசாக பெருவிழாவின் போது நெருப்பில் இருந்து அவதரித்த முருகப் பெருமானின் திருமேனியை குளிர்விக்க பக்தர்கள் பலரும் பால் குடம் ஏந்தி வந்து பால் அபிஷேகம் செய்கிறார்கள். திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் மட்டுமல்ல, கருவறையில் தண்ணீர் நிரப்பி, ஆத்ம சாந்தி அபிஷேகமும் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து, மனம் உருகி வழிபட்டால் முந்தைய பிறவிகளில் செய்த பாவ வினைகள் நீங்குவதுடன், அந்த பாவ வினைகளால் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

வைகாசி வசந்த விழா அனைத்து முருகன் கோவில்களிலும்   சிறப்பாக கொண்டாடப்படும். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படும். திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருவிழாவின் அனைத்து நாட்களிலும் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 3 நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்தநாதர் முனிகுமாரர்களுக்கு சப விமோசனம் (சாப விமோசனம்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலகு வேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள். பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் மே 22ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில்:

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தையொட்டி 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாள்-1 முதல் 8-ம் தேதி வரை வசந்த உற்சவம் நடைபெறும் 9ம் நாளான மே 22ம் தேதி வைகாசி விசாகம் , விசாக கொரடு மண்டபத்தில் காலை முதல் மாலை வரை ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. மே 23ம் தேதி மொட்டைஅரசு உற்சவம் நடக்கிறது. மொட்டைஅரசு திடலில் முருகப் பெருமான் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதையொடிடடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த விழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் வைகாசி வசந்த உற்சவம், மற்றும் வைகாசி விசாகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வசந்த விழா நேற்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரம், பூஜைகளை தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். விழாவையொட்டி கோயிலில் உள்ள வசந்த மண்டபம் தண்ணீர் நிரப்பி குளிர்விக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருள்வார். இதன்படி வரும் 21ம் தேதி வரை வசந்த உற்சவம் நடைபெறும்.

இதில் முக்கியமான வைகாசி விசாகம் மே 22ம் தேதி காலை துவங்கும் நிலையில், காலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும். இதையடுத்து 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தை மும்முறை வலம் வந்து விசாக குடிலில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அப்போது பல்லாயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இதனைத்தொடர்ந்து மே 23ம் தேதி காலை 7 மணிக்கு திருப்பரங்குன்றம் தியாகராசர் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மொட்டையரசு திடலை அடைவார். பின்னர் அங்குள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையடுத்து இரவு பூப்பல்லக்கில் கோயிலை வந்தடைவார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

அதுபோலஇ, அழகர்கோயில் மலைமேல் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோயிலிலும் வைகாசி விசாக விழா நேற்று சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது. மூலவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்பு கட்டி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் மாலையில் மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 22ம் தேதி வைகாசி வசந்த உற்சவ திருவிழா நடைபெறுகிறது.

பழனியில் வைகாசி விசாகம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாகும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. அதிலும் குறிப்பாக விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று ‘வைகாசி விசாகம்’ திருவிழா ஆகும்.

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு 2024 மே 16 ஆம் தேதி வியாழன்கிழமை அன்று ஆரம்பம் ஆகிறது. அந்நாளில், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

சுவாமி வீதி உலா:
இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருக்கல்யாணம்:
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது. அந்நாளில், மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதனை அடுத்து, மறு நாள் அதாவது மே 22ஆம் தேதி புதன்கிழமை அன்று வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

வைகாசி விசாக திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம்:
இதனிடையே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திர குழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை, மாலை என நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர குழு நேற்று (மே.07) முதல் தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கிரிவலம் வரும் அந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.