காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக போற்றப்படுகிறது உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நடப்பாண்டு, வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வரும் 20-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவின் கிழக்கு மேற்கு பகுதிகளில் 2 ராஜ கோபுரங்களுடன், இந்த கோவிலில், பெருமாள் “அத்தி வரதர்” என்ற பெயரில் வழிபடப்படுகிறார், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அனந்த சரஸ் குளத்தில் வெளிவருவதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில், 96 அடி உயரமுள்ள ராஜகோபுரம் உள்ளது.
மேலும், அனந்த சரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம், என இரு திருக்குளங்களுடன், வேணுகோபாலன் சன்னதி, பூவராகவர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி, உடையவர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, வேதாந்த தேசிகர், தாத தேசிகன் சன்னதி, ராமர் சன்னதி, திருப்பனந்தாள்வான் சன்னதி, கரிய மாணிக்க பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி, ஆண்டாள் சன்னதி, சேனை முதன்மையார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, மலையாள நாச்சியார் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுடன் விளங்குகிறது.

இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு, நாள்தோறும் வரதராஜ பெருமாள், காலை, மாலை, என இரு வேலைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. பிரமோற்சவ விழாவின் 7-வது நாளை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.
வீடியோ உதவி: நன்றி – ஜோதி டிவி