மும்பை: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசே, சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென கோரியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஜ் தாக்கரே. இவர், மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தாக்கம் தொடர்பாக தனது பெரிய கவலையைத் தெரிவித்துள்ள ராஜ் தாக்கரே, மராட்டியத்திலுள்ள தனியார் ஏஜென்சிகள், தாமாகவே சுதந்திரமாக தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் மற்றும் புனேயிலுள்ள சீரம் நிறுவனம், மராட்டியத்தில் சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், அதேசமயம் அதில் ஒரு ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மேலும், ஹாப்கின் பயோ-பார்மசூட்டிகல் கார்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் ஆகியவற்றுக்கும், தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் அனுமதியை வழங்க வகைசெய்து, அதன்மூலம் போதுமான அளவிலான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கு வகைசெய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.