சென்னை

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை இந்தியாவில் 3,03,61,699 பேர் பாதிக்கப்பட்டு 3,98,484 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் 2,94,19,497 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5,31,803 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் விரைவில் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.  சென்னையில் மாநகராட்சி சார்பில் நகரெங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், “சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் இயங்காது.  கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்று முகாம்கள் மூடப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.