ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தடுப்பு மருந்துகள் நாளையுடன் முடிவடைவதால், மேலும் தடுப்பூசி மருந்துகளை உடனே அனுப்பி வைக்குமாறு மத்தியஅரசுக்கு, மாநிலத்தை ஆட்சி செய்யும் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைதடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், மார்ச் 1ந்தேதி முதல் 2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிதொடங்கி நடைபெற்று வருகிறது.
தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முன்னணியில் உள்ளது. கடந்த 5ந்தேதி மாநில முதல்வர் அசோக் கெலாட் தடுப்பூசி எடுத்துக் கொண்டார். நாட்டின் தடுப்பூசிகள் எடுக்கப்படுவதில் 2வது இடத்தில் குஜராத் மாநிலமும், 3வது இடத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவும் உள்ளன. தமிழகம் 9வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தங்களிடம் தற்போது அடுத்த 2 நாட்களுக்கான தடுப்பூசி மருந்து மட்டுமே உள்ளது, அதாவது 5.85 லட்சம் டோஸ் மட்டுமே கையிருப்பு உள்ளது. இது நாளையுடன் முடிவடைந்துவிடும். எனவே அவசரமாக மேலும் தடுப்பூசி மருந்துகளை அனுப்ப வேண்டும் என மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
அத்துடன், முதல்டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியை குறைத்து, ஏற்கனவே முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு 2வதுடோஸ் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ரகு ஷர்மா, மாநிலத்தில் 85,000 பேருக்கு அவசரகால கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி இயக்கி இப்போது வேகமான வேகத்தில் நகர்ந்து வருவதால், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45+ நோய்கள் பிரிவில் உள்ளவர்களுக்கு மொத்தம் 136 லட்சம் தடுப்பூசி அளவு தேவைப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் மாநிலத்திற்கு 60 லட்சம் தடுப்பூசி அளவு தேவைப்படுகிறது என்றவர், தடுப்பூசி போடுவதற்காக ராஜஸ்தானில் 67 லட்சம் பயனாளிகள் உள்ளனர் என்று கூறினார்ல.
மெகா தடுப்பூசி இயக்கம் ஜனவரியில் தொடங்கியதில் இருந்து மத்திய அரசிடம் இருந்து 29.9 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், மாநில அரசு 2.15 லட்சம் அளவை ராணுவத்திற்கு வழங்கி உள்ளது. மேலும், . பூண்டி, ஜலவார், ஜுன்ஜுனு, ஆல்வார், நாக்ப்பூ ர், ஜெய்ப்பூர் போன்ற மாவட்டங்களில் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தடுப்பூசிகளை மாநிலம் மீண்டும் விநியோகித்துள்ளது.
திங்கட்கிழமை (நேற்று) ராஜஸ்தான் சட்டசபை வளாகத்தில் 38 எம்.எல்.ஏக்கள் உட்பட 77 பேர் தங்களது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.
தற்போதைய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,21,711 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இறப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.