சென்னை: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% முதல் 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங்  கொரோனா மருத்துவமனைக்கு தனியார் அறக்கட்டளை வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உதவியால் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உதவியாக உள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு கிங் அரசு கொரோனா மருத்துவமனையில் 650 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளது. தற்போது 224 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது. 384 படுக்கைகள் காலியாக உள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 54,850 படுக்கைகள் காலியாக உள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் 1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கியுள்ளது. நேற்று வரை 1 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% நோய் எதிர்ப்பு திறன் உள்ளது, இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் குறித்து மத்தியஅரசு எவ்வித முடிவெடுக்கவில்லை. முதலமைச்சர் டெல்லி செல்லும்போது பிரதமரிடம் செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து வலியுறுத்துவார்.

மேலும், தமிழ்நாட்டில் 1493 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டதில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாஉயிரிழப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பாதிப்பும்  3 மாவட்டங்களில் 100கீழேயும், 27 மாவடங்களில் 500க்கும் கீழ், ஆயிரத்துக்கு மேல் 2 மாவட்டங்களில் மட்டுமே தொற்று உள்ளது.  கோவையில் 4 ஆயிரம் அளவிற்கு இருந்த தொற்று இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தொற்றின் அலை முழுமையாக குறைந்தாலும் தொடர்ந்து முககவசம் அணிதல், தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.