சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரம் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
‘கப்பலோட்டிய தமிழர்‘ வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழகஅரசுக்கு வ.உ.சி. ஆய்வு வட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன் தலைவர் ரெங்கையா முருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘கப்பலோட்டிய தமிழர்‘ வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 5 என்பதைத் தாங்கள் அறிவீர்கள். 1972ஆம் ஆண்டு வ.உ.சி. அவர்களின் நூற்றாண்டை மிகச் சிறப்பாக அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கொண்டாடியதை இத்தருணத்தில் தங்களுக்கு நினைவுபடுத்தி, அதுபோன்று கொண்டாடுவதற்கு தற்போது அவரின் தவப்புதல்வனாகிய தங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு வந்துள்ளதை எண்ணி உவகை கொள்கிறோம்.
‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி. அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஓர் ஆண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு சிறப்பு விழாவாகக் கொண்டாடத் தாங்கள் ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் எங்களது கோரிக்கைகளை தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை ஏற்று தமிழக முதல்வர், வ.உ.சிதம்பரனார் வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடப்படும் என அறிவித்து உள்ளார்.