உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்
உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும்.
தற்போது இப்பகுதி மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.  இறைவன் கல்லில் – மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.  இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார்.
திருவிழா:
பங்குனியில் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.
தல சிறப்பு:
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 67 வது தேவாரத்தலம் ஆகும்.
பொது தகவல்:
மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, “உயிர்கொண்டார்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும். பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது.
பிரார்த்தனை:
பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.  குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.