சமோலி: பனிப்பாறை உடைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை  27  ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 171 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 7ந்தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் மலைப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் திடீரென வெடித்து சிதறி, வெள்ளம் ஏற்பட்டது.  இதனால், அந்த பகுயில் ஓடும்  தவுலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கா,   அப்பகுதியில் செயல்பட்டு வந்த  இரு நீர் மின் நிலையங்களை சூடியதுடன், கரையோரப் பகுதிகளையும் அடித்துச் சென்றது. திடீர் வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாக வும் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரப்பட்டுள்ளதாகவும் உத்தராகண்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி  ஏராளமானார் தத்தளித்தனர்.  அவர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்றது. மேலும், அங்குள்ள  நீர் மின் நிலையங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்கப்பாதைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அதனுள் வேலை செய்துகொண்டிருந்த பலரின் நிலைமை என்னவானது என்று கேள்விக்குறி எழுந்துள்ளது. மீட்பு பணியில், மாநில பேரிடர் குழுவுடன்,  இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.  மற்றும் முப்படைகளின் குழுவினரும் மீட்பு பணியில் களமிறங்கி உள்ளனர்.

இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 171 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விபத்தின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், பல டன்கள் எடை கொண்ட பிரமாண்ட பனிப்பாறைகள் திடீரென வழுக்கிச் சென்று ஓரிடத்தில் விழுந்து உருகி வெள்ளமாக மாறியிருக்கலாம் என தெரியவருவதாகவும்  எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  கூறினார்.