டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்து வந்தார். ஆனால், கட்சிக்குள் எழுந்த அதிருப்தி காரணமாக, அவரை ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியது. அதையடுத்து, அவர் மார்ச் 9ந்தேதி அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, புதிய முதல்வராக பா.ஜ., எம்.பி., திரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10ந்தேதி பதவி ஏற்றார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் முதல்வர், ஜீன்ஸ் குறித்து பேசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில், அவருக்கு சிறு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறருது. அதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.