லக்னோ:

உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த புதிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் வழங்க வேண்டும். இல்லை என்றால் ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் பெருமளவில் முறைகேடு நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. அதனால் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

ஆனால், இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இ ந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உ.பி. மாநில தேர்தல் ஆணையர் அகர்வால் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘‘மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் புதிய ஓட்டுபதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். புதிய இயந்திரம் பயன்படுத்த முடியாத பட்சத்தில் ஓட்டுசீட்டு முறையை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

2006-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.