லக்னோ: உத்திரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், தலித் மாணாக்கர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத சில மாணாக்கர்கள், தங்களுக்கென தனி தட்டுகளை வீட்டிலிருந்து எடுத்து வந்த விஷயம் பரபரப்பாகியுள்ளது.
அம்மாநிலத்தின் மிர்ஸாபூரில் மதிய உணவாக மாணாக்கர்கள் உப்பும் ரொட்டியும் உண்ட சர்ச்சை அடங்குவதற்குள், இந்த சர்ச்சை எழுந்து மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்பள்ளியில் இருக்கும் தட்டுகளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலை உள்ளதால், தாங்கள் தனியாக வீட்டிலிருந்தே தட்டுகளை எடுத்து வந்துவிடுவதாக தெரிவித்த சில மாணாக்கர்கள், சாப்பிடும்போது தனித்தே அமர்ந்து உண்ணுகிறார்கள்.
“மாணாக்கர்களை தனி தட்டுகள் எடுத்துவர வேண்டாமென அறிவுறுத்தியும், தனிக் குழுவாக அமர்ந்து உண்ண வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டும், சில உயர்ஜாதி மாணாக்கர்கள் தங்களுடைய செயலில் பிடிவாதமாக இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கிறார் அந்தப் பள்ளியின் முதல்வர்.