உ.பி அமைச்சரவை முதல் கூட்டம்- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆலோசனை

லக்னோ,

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முக்கியமாக சிறு குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்பட மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் 312 தொகுதிகளில் வெற்றிப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உத்தரபிரதேசத்தில் அனுமதியில்லாத மாடு, ஆடு இறைச்சிக் கடைகளை மூடுவது, பொது இடங்களில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை கைது செய்வது என அதிரடியாக செயல்பட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

இந்நிலையில் ஆதித்யநாத் இன்றுமாலை தனது  அமைச்சரவைக்    கூட்டத்தை கூட்டியுள்ளார்.  தேர்தலின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளையும், குறிப்பாக சிறு குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்தும்  விரிவாக பேசப்படும் என அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.  அவர்கள் வங்கிகளில் 62 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
Uttar Pradesh CM Yogi Adityanath to hold first cabinet meeting today: Farmer loan waivers likely to be discussed