டில்லி

த்தராகாண்ட் முதல்வர் திரத் சிங் ரவத் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் அளித்து உள்ளார்.

உத்தராகாண்ட் முதல்வராகச்  பதவி ஏற்ற திரத் சிங் ரவத் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்க வேண்டும் என்பது விதியாகும்.  எனவே அவர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு முன்னர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி அவர் வெற்றி பெற்றாக வேண்டும் என்னும் நிலை உள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில் இடைத்தேர்தலை நடத்துவது இயலாத காரியம் எனக் கூறப்படுகிறது.  இதையொட்டி கடந்த மூன்று நாட்களில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்த ரவத் தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் குறித்துத் தெரிவித்துள்ளார்.  ஆயினும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இடைத் தேர்தல் நடத்தமுடியும் என்னும் நிலை உள்ளது.

இதையொட்டி ரவத் தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரை புதிய முதல்வராகத் தேர்வு செய்ய வசதியாகத் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் ஜே பி நட்டாவிடம் அளித்துள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  மேலும் அவர் வரும் வெள்ளிக்கிழமை டேராடூன் திரும்பி வந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.