டில்லி

கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்துகளைப் பயன்படுத்தினால் உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்படும் என எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   உலக அளவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.  இங்கு தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டி உள்ளது.  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி நேற்று பிரதமர் மோடி ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டி உள்ளார்.

இதில் எய்ம்ஸ் தலைவரும் கொரோனா எதிர்ப்பு படை உறுப்பினருமான ரந்தீப் குலேரியா தனது உரையில், “கொரோனா ஆரம்ப காலத்தில் பல நோயாளிகள் உடனடி நிவாரணத்துக்காக ஸ்டிராய்ட் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.  இது வைரசை மேலும் வலுவானதாக மாற்றி விடுகிறது.  இதனால் மிகவும் லேசான பாதிப்பு உள்ளவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உடலில் ஆக்சிஜன் குறைய நேரிடுகிறது.

இதனால் முதலில் ஆக்சிஜன் சிகிச்சை, அடுத்ததாக ஆக்சிஜன் குறைபாடு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் மட்டும் ஸ்டீராய்ட் மருந்துகள் அளிப்பது என்னும் முறையை பின்பற்ற வேண்டும்.  கொரோனா ஜுரம் என்பது மற்ற வைரல் ஜுரத்தை விட மாறுபட்டதாகும்.   இது ரத்தம் கட்டிப் போவதை ஊக்குவிக்கும் என்பதால் நுரையீரலில் ரத்தம் கட்டிப்போவதை நிறுத்த வேண்டும்.

பலர் ஆரம்ப காலத்திலேயே சிடி ஸ்கேன், பயோ மார்க்கர் ஆகிய சோதனைகளை எடுத்துக் கொள்கின்றனர்.   ஓரளவு அதிகமான பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனைக்கிணங்க இந்த சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.  தேவையில்லாமல் பயோமார்க்கர் சோதனை செய்வதால் தவறான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

பலரும் சிடி ஸ்கேன் மூலம் பாதிப்பு குறித்த சரியான முடிவு தெரியும் என்பதால் அதை விரும்புகின்றனர்.   ஒரு சிலர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.  இதனால் அவர்கள் கதிர் வீச்சுக்கு ஆளாகின்றனர்.  லேசான பாதிப்பு உள்ளவர்களும் ஆக்சிஜன் அளவு சரியாக இருந்து வீட்டுத் தனிமையில் உள்ளோரும் சிடி ஸ்கேன் செய்யத் தேவை இல்லை.

ஒரு சிடி ஸ்கேன் என்பது நெஞ்சு எக்ஸ்ரேயைப் போல் 300-400 மடங்கு அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.   அடிக்கடி ஸ்கேன் செய்து கொள்வோருக்குக் குறிப்பாகச் சிறு வயதினருக்குப் பிற்காலத்தில் புற்று நோய் உண்டாகும் அபாயம் உள்ளது.   இதைச் சர்வதேச அணுசக்தி ஆய்வு நிலையம் உறுதி செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.