வாஷிங்டன்: அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலரிதான் என்று ஒபாமா பாராட்டியுள்ளார். மேலும் , ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட இருப்பது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஒபாமா, ஹிலாரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், “நானும் ஹிலரியும் உட்கட்சி தேர்தலில் போட்டி போட்டியிட்ட போதும், என்னுடன் இணைந்து அவர் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய போதும் பின் லாடன் அழிக்கப்பட்ட போதும் சரி… ஹிலரியின் முடிவுகளையும், உறுதியையும் நேரிடையாக கண்டிருக்கிறேன்.
எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பதில் ஹிலாரி வல்லவர். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலரியை விட தகுதியானவர்கள் யாரும் கிடையாது. அவருடன் இணைந்து தேர்தல் களத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமாவின் ஆதரவு தனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று ஹிலாரி கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “ஒபாமாவின் பாராட்டு எனக்கு பெருமை அளிக்கிறது. அவரது வார்த்தைகள் எனக்கு மிகவும் உற்சாகத்தை அளித்துள்ளது” என்று ஹிலாரி தெரிவித்திருக்கிறார்.
ஒபாமாவை தொடர்ந்து, துணை அதிபர் ஜோ பைடனும் ஹிலரிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்டவர் பெர்னி சான்டர்ஸ். அவரை ஒபாமா சந்தித்து பேசினார். “எதிர்க்கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் – ஐ தோற்கடிக்க நமது ஜனநாயகக் கட்சியினர் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று அவரிடம் ஒபாமா தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது ஒபாமா பல்வேறு விதமான யோசனைகளை சான்டர்ஸிடம் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் சான்டர்ஸ், ”டொனால்ட் ட்ரம்ப் – ஐ தோற்கடிப்பதற்கு ஹிலரியுடன் இணைந்து தேவையான அனைத்து பணிகளையும் செய்வேன்” என்றார்.
கட்சியின் அறிவிக்கப்படாத அதிபர் வேட்பாளர் ஆகிவிட்ட ஹிலரி, தற்போது துணை அதிபர் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.
“ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், உடனடியாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை, துணை அதிபருக்காக தேடிக்கொண்டு இருக்கிறேன். அவர் பெண்ணாகவும் இருக்கலாம்” என்று ஹிலரி தெரிவித்துள்ளார்.
சோசலிஸ்ட் கொள்கை கொண்ட வளர்ந்து வரும் தலைவரான எலிசபெத் வாரன் என்பவரை மனதில் வைத்துத்தான் ஹிலாரி அப்படி தெரிவித்தார் என்ற யூகம் நிலவுகிறது.
‘ஹிலரி க்ளிண்டன் – எலிசபெத் வாரன்’ இருவரும் அதிபர் – துணை அதிபர் பதவிகளுக்கு வந்துவிட்டால் அது உலக சரித்திரத்தில் முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.