இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்து ஆட்டம் காண வைத்திருக்கும் வேளையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களை காப்பாற்ற ஒரே வழி என்று உணர்த்தியிருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கம் வரை தடுப்பூசிகளை தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்த இந்தியா, தற்போது தனது நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசி கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

தடுப்பூசி தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் 2023 ம் ஆண்டு வரை ‘நாங்க ரொம்ப பிசி’ என்று கூறிய நிலையில், இதுகுறித்து அமெரிக்க அரசு மற்றும் மருந்து நிறுவனங்களுடன் பேசுவதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இவரது அமெரிக்க விஜயத்திற்கு ஆறுதலளிக்கும் விதமாக 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை விடுவிக்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்க அரசின் தெற்காசிய விவகார துறை இணை செயலாளர் டீன் தாம்ப்ஸன் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.