நியூயார்க்
அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் தேவையற்ற போர்களை நடத்தாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பல நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிப் போர் புரிந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும். கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டு தாலிபான்களிடம் இருந்து அந்நாட்டுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது. தற்போது அமெரிக்கப் படைகள் அங்கிருந்து திரும்பி வந்ததால் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளனர்.
தற்போது நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் 76-வது பொது அவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”இனி தேவையற்ற போர்களில் அமெரிக்கா ஈடுபடாது. உலகின் முன்பு தற்போதுள்ள சவால்களுக்குப் போர்கள் மூலம் தீர்வு காண முடியாது. அமெரிக்கா தன்னையும் தனது கூட்டாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவையிருந்தால் போரைக் கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்தும்
அமெரிக்கா எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை. நாங்கள் அமைதிக்காக எந்த நாட்டுடன் இணைந்து செயல்படவும் தயார் வெடிகுண்டுகள் மூலம். கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுக்க முடியாது. இதற்கு அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியே தேவை. பருவநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.