இருமுறை முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவித்தது.

பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பிரிட்டன் அதிகாரிகளுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் 4 ம் தேதி முதல் முழுமையாக (இருமுறை) அஸ்ட்ராஜெனிகா-வின் கோவிஷீல்டு, பைசர்-பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்ஸன் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பிரிட்டன் வர தடையில்லை என்று விளக்கமளித்துள்ளது.

அதேவேளையில், பிரிட்டன் மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் உள்ள பொது சுகாதார நிறுவனங்கள் செயல்படுத்தும் தடுப்பூசி திட்டத்தின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பிரிட்டன் வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

இந்த பட்டியலில், இந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை, மேலும் சிகப்பு, மஞ்சள், பச்சை என்று மூன்று விதமாக நாடுகளைப் பிரித்துள்ளது.

இதில் இந்தியா மஞ்சள் நிற பட்டியலில் உள்ளது, இந்த பட்டியலில் இடம்பெற்ற நாட்டில் இருந்து வருபவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் தாங்கள் வருவதற்கு முன்னும் பிரிட்டன் வந்த பின்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அந்த நாட்டில் உள்ள தடுப்பூசி திட்டம் பிரிட்டனால் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதும், இந்தியாவில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டம் பிரிட்டன் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து இந்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்று பிரிட்டன் செல்ல தகுதியான இந்தியர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.