வாஷிங்டன்
வரும் டிசம்பரில் பிஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடுவதைத் தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை பிஃபைசர் நிறுவனம் மற்றும் பயோண்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்குத் தயாராக உள்ளதாகச் செய்திகள் வெளி வந்தன. இந்த தடுப்பு மருந்து 90% ஆற்றலுள்ளதாகச் சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் இந்த மருந்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
https://www.patrikai.com/first-corona-vaccine-gives-90-protection-ready-for-approval/
இதற்கான ஒப்புதல் வரும் வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அவசர ஒப்புதலுக்கான நடவடிக்கைகளில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஈடுபட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகிஉ அமெரிக்காவுக்கு இந்த மருந்து மாதம் 2 கோடி டோஸ்கள் கிடைக்க உள்ளது. இந்த மாத இறுதியில் முதல் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பரில் அமெரிக்க மக்களுக்கு இந்த பிஃபைசர் நிறுவன தடுப்பூசி போடுவதைத் தொடங்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார செயலர் அஸார் தெரிவித்துள்ளார். இந்த மருந்து முதலில் மருத்துவமனைகளில் உள்ள முதியோர்கள், சுகாதார ஊழியர்கள், பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. ஜனவரி முடிவுக்குள் இதை நிறைவு செய்து பிறகு மற்றவர்களுக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மருந்தை தவிர மாடர்னா உள்ளிட்ட மேலும் சில நிறுவன மருந்துகளும் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன். எனவே அந்த மருந்துகளும் விரைவில் கிடைக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. எனவே மார்ச் இறுதி அல்லது ஏப்ரலுக்குள் அமெரிக்காவுக்குத் தேவையான அளவு மருந்து கிடைத்துவிடும் எனவும் அசார் தெரிவித்துள்ளார்.