நியூயார்க்

மெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிர்காட்சி சாலையில் உள்ள ஒரு பெண் புலிக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உலகைத் தாக்கி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இங்கு சுமார் 3.36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1165 பேர் உயிரிழந்துள்ளனர்.  பொதுவாக இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் மூலம் பரவுவதாகவும் விலங்குகள் மூலம் மனிதருக்குப் பரவாது எனவும் கூறப்படுகிறது.   ஆனால் மனிதர் மூலம் விலங்குக்கு கொரோனா பரவியது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரான்க்ஸ் உயிர்காட்சி சாலையில் வசித்து வரும் நாடியா என்னும் பெண் மலேசியப் புலி, அதன் சகோதரி அசுல், இரு அமுர் புலி, மூன்று ஆப்ரிகன் சிங்கங்கள் ஆகியவற்றுக்கு இருமல் மற்றும் ஜுரம் ஏற்பட்டுள்ளது.  இதில் நாடியா தவிர மற்ற மிருகங்கள் உடல்நலம் தேறி உள்ளன.  ஒரு சந்தேகத்தில் நாடியாவை சோதனை செய்ததில் அதற்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.

இந்த விலங்குகளைப் கவனிக்கும் உயிர்க்காட்சி பணியாளருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர் மூலம்  புலிக்கு பரவி இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி மற்ற விலங்குகளும் சோதிக்கப்பட்டுள்ளன.   சாதாரண உடல்நலக்குறைவு தவிர வேறு எந்த பாதிப்பும் அந்த விலங்குகளுக்கு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

 

மனிதக் குரங்கு போன்ற விலங்குகளுக்கு இந்த கொரோனா பாதிப்பு ஏற்படும் என விலங்கியல் நிபுணர்கள் ஏற்கவே தெரிவித்துள்ளனர்.  அத்துடன் இதனால் கொரில்லா, சிம்பன்சி, உராங் உட்டான் போன்ற மிருகங்களைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.  தற்போது பூனைகளின் இனமான புலிகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது ஆச்சரியகரமானது எனக் கூறப்படுகிறது.

நன்றி : பிபிசி