நியூஜெர்சி : தமிழக விவசாயிகளைக் காக்க அமெரிக்கா வாழ் தமிழர்கள் , மொய்விருந்து நடத்தி நிதி திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள்.
இது குறித்து நியூஜெர்சி வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:, ” தமிழ் நாட்டில் கடும் வறட்சி காரணமாக குறு சிறு நில விவசாயிகள் இயற்கையுடனும், படைத்த ஆண்டவனிடமும், ஆளும் அரசாங்கத்திடமும், மன்றாடி போராடி மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது குடும்பங்கள் பஞ்சத்தில் வாடுகின்றன. நீர் வளத்தில் செழித்த வேளாண்மை நிலங்கள் அனைத்தும் நீரில்லாமையாலும், அயல் நாட்டு விதைகளின் இறக்குமதியாலும், போதுமான உரங்களும், சத்துகளும் இல்லாததாலும், தரிசு நிலமாக மாறிவிட்டன.
இதனால், விவசாயிகளின் தற்கொலைகளும், மாரடைப்பு, ரத்த அழுத்த இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தனியாரிடம் வாங்கிய கடன் தொல்லைகளால் விவசாயக் குடும்பங்கள் நலிந்து போகின்றன.
நமக்கு அன்னமிட்டு வளர்த்த பூமியில் நம் விவசாயிகள், அழிவதை கண்டும் காணாதது போல, நாம், நிம்மதியாக உறங்க இயலுமா? நம்மால் முடிந்த சிறு உதவிகளை நாம் நம் தாய் மண்ணுக்கு செய்வது நம் அனைவரின் தலையாயக் கடமை அல்லவா?
ஒன்று கூடினால் உண்டு வாழ்வு. வாருங்கள் ஒன்று கூடுவோம் நமக்கு அன்னமிடும் விவசாயிகளைக் காப்போம் நம் தமிழ் மண்ணில் விவசாயத்தை மீட்போம்” என்று அந்த அறிக்கையில், நியூஜெர்சி வட்டார தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மே 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வெஸ்ட் விண்ட்சர் அருகில் 31 Allens Road ல் காலை 11 மணி முதல் கிராமியத் திருவிழா மொய்விருந்து நடைபெற உள்ளது மொய் விருந்து நன்கொடை செலுத்தும் முறை உள்ளிட்ட தகவல்களை www.moivirunthu.org என்ற இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
தமிழக விவசாயிகளின் உயிர் காக்க, அமெரிக்கவாழ் தமிழர்கள் எடுக்கும் முயற்சி நெகிழ வைத்துள்ளது.