மிச்சிகன்: அமெரிக்க பள்ளி ஒன்றில் டீனேஜ் மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். பலர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தீவிரமாக பரவி வருகிறது. சமீப காலமாகவே பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், பள்ளி குழந்தைகளே துப்பாக்கிச் சூடு நடத்துவதும்  வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில், மிக்சிகன் மாகாணத்தில் உள்ள  ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. 15 வயது மாணவர்  ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சக மாணவர்களை நோக்கி திடீரென சுட்டதால், மாணவர்கள் அலடியடித்து ஓடினர். அந்த மாணவர் 15 முதல் 20 ரவுண்டு வரை சுட்டதாக கூறப்படுகிறத. இதில் 3 மாணவர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த மாணவனை மடக்கி கைது செய்தனர். அவனிடம் இருந்த  கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இந்த பள்ளியில் சுமார் 1,800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் விரைந்து வந்த தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அந்த பகுதியைச் சேர்ந்த அண்டர்ஷெரிப் மைக்கேல் மெக்கேப் “இது மிகவும் சோகமான சூழ்நிலை” என்று தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக “எங்களிடம் நிறைய பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“இது ஒவ்வொரு பெற்றோரின் மோசமான கனவு என்று நான் நினைக்கிறேன்,” என்று மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர் அதே செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.