வாஷிங்டன்: வளைகுடாவின் கத்தார் பகுதிக்கு தனது F-22 ஸ்டெல்த் போர் விமானங்களை முதன்முதலாக அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இதன்மூலம், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் படையின் வலிமை பெரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெல்த் எனப்படுவது உலகின் அதிநவீன போர் விமான வகையைச் சேர்ந்ததாகும். அமெரிக்க உளவு டிரோன், ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது மற்றும் ஏமன் உள்நாட்டுப் போர் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஈரானுடன் கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுக்கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தை திரும்பப் பெற்ற டிரம்ப் நிர்வாகம், ஈரான் மீது பல பொருளாதார தடைகளையும் விதித்தது. அந்த நிலையில்தான், வளைகுடாப் பகுதிக்கு மிகவும் அதி நவீன ஸ்டெல்த் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதும் கவனம் பெறுகிறது.
அதேசமயம் எத்தனை ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்ற விபரங்கள் வெளியாகவில்லை.