டென்னீஸ்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட செவிலியர் உயிருடன் இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னீஸ் மாகாணத்தில் உள்ள சட்டனூகா என்னும் நகரில் கதோலிக் சுகாதார மையத்தில் செவிலியராக டிஃபானி டோவர் என்னும் பெண் பணி புரிந்து வருகிறார்.  அமெரிக்காவில் தற்போது முதல் கட்டமாக முதியோர், சுகாதார ஊழியர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  அவ்வகையில் டிஃபானிக்கு கடந்த 17 ஆம் தேதி ஊசி போடப்பட்டது.  இது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது.

பிஃபிசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி போட்ட உடன் செவிலியர் டிஃபானி மயங்கி விழுந்ததும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.  இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையொட்டி அவர் மரணம் அடைந்துள்ளதாக வதந்திகள் பரவின.  இந்த வதந்தியை உண்மை என நம்பி பலரும் முகநூல், டிவிட்டர் ஆகிய தளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் வெளியாகி வைரலாகியது.

இது குறித்து ஒரு சில ஊடகங்கள் ஆய்வு நடத்தி உள்ளன. அப்போது டிஃபானிக்கு வலி ஏற்படும் போது மயக்கம் அடைவது வழக்கம் எனவும் சில நிமிடங்களில் அவர் சரியாகி விடுவார் எனவும் தெரிய வந்துள்ளது.   தமக்கு வலி ஏற்படும் போது, ஊசி குத்திக் கொள்ளும் போது, அல்லது காலில் இடித்துக் கொள்ளும் போது தமக்கு மயக்கம் வரும் என்பதையும் சில நிமிடங்களில் அது சரியாகி விடும் எனவும் அவர் ஒரு ஊடகத்துக்குப் பேட்டி அளித்தது வெளியாகி உள்ளது.

கதோலிக் சுகாதார மையத்தில் பணி புரிந்து வரும் மூன்று மருத்துவர் மற்றும் மூன்று செவிலியர்களுக்கு அன்று கொரோனா ஊசி போடப்பட்டுள்ளது,   அவர்களில் யாருக்கும் மயக்கம் ஏற்படவில்லை என ஊசி போட்டுக்கொண்ட மருத்துவர் ஜெஸ்ஸி தெரிவித்துள்ளார்.  மேலும் டிஃபானிக்கு ஏற்கனவே ஒரு முறை ஊசி போட்டு கொண்ட போது மயக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.   மேலும் சிலருக்குத் தடுப்பூசி போடும் போது பயம் காரணமாக மயக்கம் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.